குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் மயில்கள்
ஊட்டி : மஞ்சூர் அருகே துானேரி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் மயில்கள் உலா வருகின்றன.நமது தேசிய பறவையான மயில்களை, நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் காண்பது அரிது. இவை மனிதர்கள் நடமாட்டம், வாகனங்கள் சப்தம் கேட்டால் பறந்து விடும். தற்போது, மாவட்டத்தின் சில கிராமங்களில் இவை அடிக்கடி வந்து செல்கின்றன. மனிதர்களை கண்டு அச்சப்படவில்லை. அதில், மஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் காணப்படும் மயில்கள், விளை நிலங்கள், தேயிலை தோட்டங்களுக்கு செல்லாமல், குடியிருப்புகளில் சுற்றிதிரிவதையே வாடிக்கையாக கொண்டுள்ளன. நேற்று குந்தா துானேரி கிராமத்திற்கு காலையில் வந்த மயில்கள், குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன. அங்கு கிடைக்கும் தானியங்களை உணவாக உட்கொண்டன. உள்ளூர் மக்களை பார்த்தாலும் அச்சப்படாமல் நின்றிருந்தன. வனத்துறையினர் கூறுகையில்,'வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களுக்கு நாள்தோறும் மயில்கள் வந்த வண்ணம் உள்ளன. உள்ளூர் மக்களை கண்டு அச்சப்படுவதில்லை. மயில்களுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது,' என்றனர்.