ஜெகதளாவில் தரமில்லாத சாலை பணி; ஒரே மழையில் கற்கள் பெயர்ந்து வரும் அவலம்
குன்னுார்; குன்னுார், ஜெகதளா கலைமகள் சாலை தரமில்லாமல் செப்பனிடப்பட்டதால், மழையால் பெயர்ந்து வருகிறது.குன்னுார் அருகே ஜெகதளா பேரூராட்சி சார்பில், கடந்த மாதத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 65 மீட்டர் துாரத்துக்கு இரவு நேரத்தில் அவசர, அவசரமாக சாலை செப்பனிடப்பட்டது. தரமில்லாமல் மேற்கொண்ட பணியால், சாலையில் கற்கள் சிறிது, சிறிதாக பெயர்ந்து வருகிறது. இது தொடர்பாக மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அனுப்பி ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையில், கற்கள் பெயர்ந்து சாலை மோசமான நிலைக்கு மாறி வருகிறது. மக்கள் கூறுகையில், 'ஏற்கனவே, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணத்தை பெற்ற பேரூராட்சி நிர்வாகம், கழிவுநீர் கால்வாய் அமைக்காமல், சாலை பணியை முடித்தது. தற்போது மழை பெய்து வருவதால், மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.