உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உண்ணி செடிகள் அகற்றும் பணி: வனப்பகுதியில் தீவிரம்

உண்ணி செடிகள் அகற்றும் பணி: வனப்பகுதியில் தீவிரம்

கூடலுார்; கூடலுார் வனகோட்டத்தில், பயனற்ற உண்ணி செடிகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், எந்த பயனும் இன்றி அதிகரித்து வரும் உண்ணி செடிகளால், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் அவ்வப்போது செடிகளை அகற்றி வந்தனர்.இது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ஐகோர்ட் உத்தரவுபடி உண்ணி செடிகள் வேரோடு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். முதுமலையை தொடர்ந்து, நீலகிரியில் உள்ள மற்ற வனப்பகுதிகளிலும் உண்ணி செடிகள் அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடலுார் வனக்கோட்டத்தில், மாதம் தலா, 124 ஏக்கர் வீதம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இம்மாதம், கூடலுார் வனச்சரகம் புளியம்பாறை, செம்பக்கொல்லி உள்ளிட்ட வன கோட்ட வனப்பகுதிகளில், 124 ஏக்கரில் உண்ணி செடிகள் அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இப்பணியில் பெரும்பாலும் பழங்குடியினர் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'ஐகோர்ட் உத்தரவுப்படி கூடலுார் வனப்பகுதிகளில், மாதம் தலா, 124 ஏக்கர் பரப்பிலான உண்ணி செடிகள் அகற்றும்பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக, அப்பகுதியில் 'டிரோன் கேமரா' உதவியுடன் சர்வே செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பயனற்ற உண்ணி செடிகளை அகற்றுவதன் மூலம், அப்பகுதியில் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் விரும்பி உண்ண கூடிய புற்கள், தாவரங்கள் இயற்கையாக வளர வாய்ப்புள்ளது. தேவை உள்ள இடங்களில் புற்கள், தாவரங்கள், மரங்கள் நடவு செய்து வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வனவிலங்குகளின் உணவு தேவை வனப்பகுதிகளில் பூர்த்தி செய்ய முடியும். மனித- விலங்கு மோதல் தவிர்க்க முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !