உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் கலை திருவிழா அசத்திய 346 மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

நீலகிரியில் கலை திருவிழா அசத்திய 346 மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

ஊட்டி; நீலகிரியில் நடந்த கலை திருவிழாவில் திறமைகளை வெளிப்படுத்திய, 346 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி அசத்தியுள்ளனர்.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த செய்யும் வகையில், கலை திருவிழா போட்டிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுவரை, 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் கலை திருவிழாவில் பங்கேற்றனர். நடப்பாண்டு ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. கலை திருவிழாவில் வர்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்புவித்தல், நாட்டுப்புற நடனம், பறை உட்பட, 84 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மாநில போட்டிக்கு 346 தேர்வு

அதில், பள்ளி அளவிலான போட்டிகள் கடந்த அக்., மாதமும், வட்டார அளவிலான போட்டிகள் இம்மாதமும் நடந்தது.அதில், பங்கேற்று சிறப்பாக அசத்திய, 1,045 மாணவர்கள் மாவட்ட அளவில் கடந்த, 12ம் தேதி முதல் 15ம் தேதிவரை நடந்த போட்டிகளில் பங்கேற்றனர். அதில், 'அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களில், 419 பேர்; அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களில், 346 பேர்,' என, 765 பேர் சிறப்பாக செயல்பட்டனர். அதிலிருந்து, 346 பேர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் உத்தரவின் பேரில், தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி