சரணாலயமாக மாறிய நூற்றாண்டு பழமை ரயில் நிலையம்! புடைப்பு சிற்பத்தில் பறவை, வனவிலங்குகள் அசத்தல்
குன்னூர்: குன்னூர் மலை ரயில் நிலையத்தில் வரையப்பட்டுள்ள புடைப்பு சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது. நாடு முழுவதும், பல்வேறு நவீன ரயில்கள் இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதை போன்று ரயில் நிலையங்கள் பொலிவு படுத்தப்பட்டு வருகிறது. இதில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 6.7 கோடி ரூபாய், மதிப்பில், பழமை மாறாமல் புதுப்பித்து பொலிவுபடுத்தும் பணிகள், கடந்த 2023ல் இருந்து நடந்து நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இங்கு, நீலகிரியின் இயற்கை காட்சிகளை ஓவியங்களாக வரைந்து, இயற்கை சூழல் வன விலங்குகள், மலை ரயில் முக்கியத்துவத்தை பெருமையை சேர்க்கும் வகையில், புடைப்பு சிற்பங்கள் ஏற்படுத்தி அதில் வண்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டுள்ளது. முதல் பிளாட்பாரம் ரயில்வே அலுவலக சுவர்களில், மயில், யானை, காட்டெருமை, வரையாடு, புலி, கருஞ்சிறுத்தை, முள்ளம்பன்றி, சிறுத்தை, கரடி, மலபார் ஸ்குரில், நீலகிரி லங்கூர் ஆகியவை சிமென்ட் வடிவமைப்பில் புடைப்பு சிற்பமாக ஏற்படுத்தி, வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கழிப்பிட சுவர்களில், இருவாச்சி, கிளிகள் உட்பட பல்வேறு பறவைகள் புடைப்பு சிற்பங்கள் ஏற்படுத்தி வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த எக்ஸ் கிளாஸ் நிலக்கரி இன்ஜின் காட்சிப்படுத்திய இடத்தில் புலிகள், காட்டெருமை, குரங்கு, மான், முயல், வரையாடு, கரடி புடைப்பு சிற்பம் ஏற்படுத்தப்பட்டது. பு டைப்பு சிற்பங்களை சுற்றிலும் பசுமை நிறைந்த வனங்கள் பல வண்ணங்களில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. பறவை மற்றும் வனவிலங்கு சரணாலயம் போல மலை ரயில் நிலையம் உள்ளது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வரு கிறது.