உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதையில் கோவில் கோபுரத்தில் ஏறி தகராறு; வடமாநில ஆசாமியால் பரபரப்பு

போதையில் கோவில் கோபுரத்தில் ஏறி தகராறு; வடமாநில ஆசாமியால் பரபரப்பு

ஊட்டி; ஊட்டியில் போதையில் கோவில் கோபுரத்தின் மீது ஏறி, தகராறில் ஈடுபட்ட வட மாநில ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மடக்கி பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஊட்டி லோயர் பஜார் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் ஊழியர்கள் கோவிலை பூட்டினர். இரவு பூட்டி இருந்த கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஒருவர் சுற்றி கொண்டு இருக்கிறார்; திருடனாக இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி மத்திய போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அந்த கோவில் கோபுரத்தின் மீது ஏறி ஒருவர் தகராறு செய்து கொண்டு சப்தம் போட்டுக் கொண்டிருந்தார். அவர் இந்தியில் பேசியதால் பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை. போலீசாரை பார்த்ததும் அதிகமாக சப்தம் போட்டு கொண்டிருந்தார். இந்தி தெரிந்த போலீஸ்காரர் ஒருவர் வந்து லாவகமாக பேசி அவரை கீழே இறக்கிய போது, பின்புறமாக சென்று அந்த ஆசாமியை மடக்கி பிடித்தனர். அவர் போதையில் இருப்பது தெரியவந்தது. போலீசார் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் இங்கு கூலி வேலைக்காக வந்து தங்கியிருப்பதும் தெரியவந்தது. போதையில் தன்னுடைய வீடு என்று நினைத்து கோவில் மீது ஏறிவிட்டதாக அவர் கூறியுள்ளார். உச்சகட்ட போதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை