மலை மாவட்டத்தில் பயனளிக்காத இலவச சைக்கிள் திட்டம்!
பந்தலூர்: நீலகிரியில், இலவச சைக்கிள் திட்டம் மாணவர்களுக்கு பயன் இல்லாத திட்டமாக மாறி வருகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, போக்குவரத்து வசதிக்காகவும், கல்வியை ஊக்குவிக்கவும் தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமவெளி பகுதிகளில் அனைவரும், சைக்கிள் ஓட்டும் நிலையில் தொலைதூர பள்ளிகளுக்கு, செல்லும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி கல்வித்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், மலை மாவட்டமான நீலகிரியில், பயன்படாத திட்டமாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேடுப்பாங்கான மற்றும் அதிக வளைவுகள், வனவிலங்கு நடமாட்டம் என, நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் நிலையில், சைக்கிள்களில் பயணிப்பது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக மாணவர்கள், பள்ளி செல்வதற்கு அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், சைக்கிளை யாரும் பயன்படுத்துவது கிடையாது. விற்பனைக்கு போகும் சைக்கிள்கள் கு றிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில், பகல் நேரங்களிலும் வனவிலங்குகள் சாலைகளில் நடமாடும் நிலையில், சைக்கிளை பயன்படுத்தினால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். கார்களில் செல்பவர்களை கூட யானைகள் தாக்கும் நிலையில், இலவச சைக்கிள்களில் பயணிப்பதை தவிர்கின்றனர். இதனால், இலவச சைக்கிள்கள், பழைய பொருட்கள் எடுக்கப்படும் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெற்றோர்கள் கூறுகையில், 'நீலகிரியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களுக்கு பதில் மழைக்காலத்தில் பயன்படுத்த ஏதுவாக மழை கோட்டு, ஸ்வெட்டர் போன்ற குளிருக்கான வெம்மை ஆடைகள் வழங்கலாம். சைக்கிள்கள் வழங்குவதால் எந்த பய னும் இல்லை.' என்றனர்.