உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கரியன் சோலையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் செயற்கை நுண்ணறிவு திட்டம்! விரைந்து முடித்தால் மனித-விலங்கு மோதல் குறையும்

கரியன் சோலையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் செயற்கை நுண்ணறிவு திட்டம்! விரைந்து முடித்தால் மனித-விலங்கு மோதல் குறையும்

கூடலுார்: 'கூடலுாரில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண, செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேணடும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடலுார் வனக்கோட்டத்தில், சீசன் காலங்களில், உணவு, குடிநீருக்காக காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனை தடுக்க, வன எல்லைகள், குடியிருப்புகளை சுற்றி அகழி அமைத்து, வன ஊழியர்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பலா, மாம் பழம் சீசன் காரணமாக, காட்டு யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, வன ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், இரவு நேரங்களில் பயன்படுத்தும் வசதி கொண்ட, 'நைட் விஷன்' தெர்மல் டிரோன் கேமரா பயன்படுத்தி, யானைகளை கண்காணித்து விரட்டி வருகின்றனர். எனினும், இவைகள் ஊருக்குள் நுழைவது நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தேவர்சோலை அருகே, 10 மாடுகளை புலி தாக்கிகொன்றுள்ளது. தேடுதல் பணி நடந்து வருகிறது. ஆறு கோடி ரூபாயில் திட்டம் இந்த சூழ்நிலையில், கூடலுாரில், 6 கோடி ரூபாய் செலவில், யானைகளை கண்காணித்து தகவல் பெறும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டத்தை அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, கரியன்சோலை ஊசி மலை பகுதியில் 'வயர்லெஸ் ரிப்பீட்டர்ஸ்' சென்டர், நாடுகாணி ஜீன்பூல் தாவரம் மையத்தில் கட்டுப்பாட்டு அறை, 35 இடங்களில் சோலார் மின்வேலியுடன் கூடிய முன்னெச்சரிக்கை கோபுரங்கள், 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்துவதற்காக கோபுரங்கள் அமைப்பது உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட சில பணிகள் நிலுவையில் உள்ளதால், திட்டம் செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், மனித- வனவிலங்கு மோதலுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மக்கள் கூறுகையில், 'வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க தீர்வு காண்பது அவசியம். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வனத்துறையினர் அமைத்து வரும், செயற்கை நுண்ணறிவு திட்டத்தை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'இத்திட்டத்தில் பெரும்பாலான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கேமரா உட்பட சில தொழிற்நுட்ப பணிகள் முடிந்து, திட்டம் விரைவில் செயல்பட்டுக்கு வரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை