உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /   கிராமங்களில் அரசு பள்ளிகளை மூடி வருவதால் கல்வி...எட்டா கனியாகும் அபாயம்!

  கிராமங்களில் அரசு பள்ளிகளை மூடி வருவதால் கல்வி...எட்டா கனியாகும் அபாயம்!

பந்தலுார்: 'நீலகிரியில் பல கிராமங்களில் மாணவர்கள் சேர்க்கை இல்லை,' என்று கூறி, அரசு பள்ளிகளை மூடி வருவதால், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி எட்டா கனியாக மாறும் அபாயம் உருவாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், அரசு கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகியவற்றின் கீழ், அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில், 280 அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், 25 அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறி மூடப்பட்டுள்ளன. கடந்த, 3- ஆண்டுகளுக்கு முன்னர், கூடலுார் கல்வி மாவட்டத்தில் கையுன்னி அருகே போத்து கொல்லி பழங்குடியின கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்பட்டு வந்த அரசு பள்ளி மூடப்பட்டு, அந்த மாணவர்கள், 2 கி.மீ., தொலைவில் உள்ள, கையுன்னி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அதேபோல், மூலக்காடு மற்றும் 'குயின்ட்' ஆகிய பள்ளிகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டன. கட்டடம் இல்லாமல் மூடல் மேலும், பந்தலுார் அருகே பென்னை பழங்குடியின கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாணவர்கள் இருந்தும் போதிய வகுப்பறை கட்டடம் இல்லாமல் மூடப்பட்டன. ஆனால், 'கல்வித்துறை சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை இல்லை,' என, தவறான தகவலை கூறி, அரசு பள்ளிகளை மூடி வருவது மாணவர்களின் கல்வி திறனை பாதிக்கும் சூழலை உருவாக்கி உள்ளது. அதில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் பழங்குடியின மக்கள், தங்கள் கிராமம் மற்றும் அதனை ஒட்டி உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை ஆர்வத்துடன் சேர்த்து படிக்க வைத்தனர். ஆனால், மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள், முறையான ஆய்வு செய்து பள்ளிகளை செயல்பட வைப்பதற்கு பதில், அவற்றை மூடி வருவது பழங்குடியின மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பண்டைய பழங்குடியினர் சங்க நிர்வாகி நீலகண்டன் கூறுகையில், ''கடந்த காலங்களில் பள்ளிகளுக்கு செல்வதற்கு விருப்பம் இல்லாமல் இருந்த பழங்குடியின மக்கள், தொடர் விழிப்புணர்வின் காரணமாக தற்போது ஆராய்ச்சி படிப்பு வரை படித்து, தங்கள் நிலையை உயர்த்தி வருகின்றனர். இதனால், பல குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் பழங்குடியின கிராமம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அரசு பள்ளிகள் செயல்படுவதால் பள்ளி செல்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இடைநிற்றல் குறைந்து வருகிறது. இந்நிலையில், சில தவறான தகவல்களை கூறி, கிராமப்புறங்களில் உள்ள பல அரசு பள்ளிகளை மூடி வருவதால் பழங்குடியின குழந்தைகள் மத்தியில், இடைநிற்றல் அதிகரித்து கல்வி கற்பதில் தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனை உடனே அரசு ஆய்வு செய்து, மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

மூடப்பட்ட பள்ளிகள் பட்டியல்...

--கோத்தகிரி- உல்லதட்டி, ஜக்கனாரை, கூட்டாடா, குள்ளங்கரை, குன்னுார் -பிக்கோள், டெராமியா, பாரஸ்டேல், ஆழ்வார்பேட்டை, பந்துமை, கீழ்சிங்காரா, கூடலுார்- பென்னை, நம்பர்-10 காலனி, கையுன்னி, மூலக்காடு,குயிண்ட் பகுதி, ஊட்டி- சி.எஸ்.ஐ., மார்வளா, கரியமலை, கடநாடு, கவரட்டி, தாய் சோலை, மட்டகண்டி, பார்சன்ஸ் வேலி, தொரையட்டி, சிவசக்தி நகர், இரியசீகை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி