உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜீன்பூல் தாவர மையத்தில் மலையேற்ற பயணம் ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஜீன்பூல் தாவர மையத்தில் மலையேற்ற பயணம் ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கூடலுார்,; கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த, 22 சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் மலையேற்றம் சென்று வந்தனர். தமிழகத்தில், 14 மாவட்டங்களில் 40 வழித்தடங்களை அடிப்படையாக வைத்து, தமிழக மலையேற்றம் திட்டம், கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. அதில், தேர்வு செய்யப்பட்ட மலையேற்ற வழிதடங்கள் தொடர்பான, டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மலையேற விருப்பமுள்ள சுற்றுலா பயணிகள், இணையதளம் மூலம் முன்பதிவு செய்து, அந்தந்த பகுதி வனத்துறையின் வழிகாட்டுதலுடன், பாதுகாப்பாக சென்று வர வசதிகள் செய்துள்ளனர்.அதில், நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டத்தில், ஜீன்புல் தாவர மையம், ஊசிமலை (கரியன் சோலை) மலையேற்றவழித்தடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையத்தில் உள்ள மலையேற்ற வழிதடத்தில், உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலையேற்றம் சென்றுவர அதிகம் ஆர்வம்காட்டி வருகின்றனர்.மலையேற்றும் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வனப்பகுதியில் தென்படும் வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் குறித்து, வன பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் சுற்றுலா வழிகாட்டிகள் விளக்கி வருகின்றனர்.இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து, நம் நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ள, 22 சுற்றுலா பயணிகள், இணையதளம் மூலம் முன்பதிவு செய்து நேற்று, ஜீன்பூல் தாவர மையத்தில் மலையேற்றம் சென்று வந்தனர். இவர்களுக்கு நீலகிரி வனச் சூழல், வன பாதுகாப்பு குறித்து வனச்சரகர் வீரமணி விளக்கினார்.ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இங்கு மலையேற்றத்தின் போது மலைக்குன்றுகள், மேடு பள்ளம் நிறைந்த வனப்பகுதியில், மிதமான காலநிலை, சுகாதாரமான காற்று, தெளிவான ஆற்று நீர்போன்றவை மறக்க முடியாத புதிய அனுபவமாகவும், மனதுக்கும் இதமாக இருந்தது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் இங்கு வந்து செல்வோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை