பூங்காவில் பேட்டரி வாகன பயணம் கட்டண ரசீது பெற்று செல்ல நடவடிக்கை
ஊட்டி: 'ஊட்டி தாவரவியல் பூங்காவில் இயங்கும் பேட்டரி வாகனத்தில் பயணிக்க, இனி ரசீது பெற்று செல்ல வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி தாவரவியல் பூங்காவில், இத்தாலியன் பூங்கா, கண்ணாடி மாளிகை மற்றும் பெரணி இல்லம் உள்ளிட்டவை சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இதனால், வார விடுமுறை நாட்கள் உட்பட, விடுமுறை நாட்களிலும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.இந்நிலையில், மாற்று திறனாளிகள் மற்றும் வயதானோர், பூங்கா அழகை கண்டு களிக்க ஏதுவாக, 10 பேர் அமரக்கூடிய வகையில், பேட்டரி வாகனம் பூங்கா நிர்வாகம் சார்பில் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணிக்கும், 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பணத்துக்கான ரசீது வழங்கப்படாமல் இருந்தது.இந்த நடைமுறை, சுற்றுலா பயணிகள் மத்தியில், சந்தேகத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, பூங்கா நுழைவு வாயிலில், பேட்டர் வாகனத்துக்கான கட்டண ரசீதை வாங்கி பயணிகள் செல்வதற்கு உடனடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை ரசீது வழங்கப்படாதது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி கூறுகையில்,''தாவரவியல் பூங்காவில், இனி பேட்டரி வாகனத்தில் செல்வோர் பூங்கா நுழைவு வாயிலில், டிக்கெட் வாங்கிய பின்பு, செல்ல வேண்டும். அதற்காக, புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,''என்றார்.