நிறைவு பெறாத சுகாதார நிலையத்தில் திறப்பு விழா; எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வினர் போராட்டம்
குன்னுார்; குன்னுார் உமரி காட்டேஜ் பகுதியில், ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதார நிலைய பணிகள் நிறைவு பெறாமல் திறப்பு விழா நடத்தியதால், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.குன்னுார் நகராட்சி, 3வது வார்டில், புதிய நகர்புற சுகாதார மைய பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த மையத்தை, பணிகள் முடியாமலேயே நேற்று முன்தினம் காணொளி மூலம், மாநில முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்றைய தினம் முழுமை பெறாமல் திறப்ப விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து, 3வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சரவணகுமார் போராட்டம் அறிவித்ததால், அரசு கொறடா ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் மையத்திற்கு வரவில்லை.இந்நிலையில், நேற்று கட்டட பணிகள் நடந்து வந்த நிலையில், டாக்டர், செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு வந்த பா.ஜ., மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், நகர செயலாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தயாராகினர். தகவலின் பேரில் டி.எஸ்.பி., ரவி தலைமையிலான, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில்,' வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதாக கணக்கு காண்பிக்க அவசரமாக திறக்கப்பட்ட இந்த மையத்தில், கதவுகள் திறந்த போது டாக்டர் மீது விழுகிறது. ஆம்புலன்ஸ் வருவதற்கும் வழியில்லை. கழிவுநீர் செல்வது, மின்சார பணி, கழிப்பிடம், தண்ணீர் வசதி, தடுப்பு சுவர் என எந்த பணியும் நிறைவு பெற வில்லை. தரமான முறையில் சீரமைத்து அதன் பின்னர் திறக்க வேண்டும்,' என்றனர். அங்கு வந்த நகராட்சி பொறியாளர் வேலுச்சாமி, பணிகளை தரமாக முடிக்க உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.