உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கேபிள் வயர் மின் திட்டத்தால் பயனில்லை; கடும் அதிருப்தியில் பழங்குடி மக்கள்

கேபிள் வயர் மின் திட்டத்தால் பயனில்லை; கடும் அதிருப்தியில் பழங்குடி மக்கள்

கூடலுார்; கூடலுார் முதுமலை தொரப்பள்ளி - தெப்பக்காடு இடையே செயல்படுத்தப்பட்ட, கேபிள் வயர் திட்டத்தில், வான் வழி தொகுப்பு கம்பியால், எவ்வித பயனும் இல்லாததால், பழங்குடி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம், அபயாரண்யம் கார்குடி, தெப்பக்காடு பகுதிகளில் வசிக்கும் வன ஊழியர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, தொரப்பள்ளியில் இருந்து, வனப்பகுதி வழியாக மின்கம்பி வாயிலாக மின்சாரம் வினயோகம் செய்யப்பட்டது. இதன் மீது மழைகாலங்களில் மரக்கிளைகள், மரங்கள் விழுந்து அடிக்கடி மின் சப்ளை பாதிக்கப்பட்டது. இதற்கு தீர்வாக, வனத் துறை சார்பில், 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தொரப்பள்ளி - தெப்பக்காடு இடையே, 11 கி.மீ., துாரத்துக்கு மின் கேபிள் வயர் திட்டத்தில், வான் வழி தொகுப்பு கம்பி அமைக்கப்பட்டது. முதுமலையில் மே, 13ல் நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். திட்டம் துவங்கிய சில நாட்கள் மட்டும், கேபிள் வயர் வழியாக மின் சப்ளை செய்யப்பட்டது. தொடர்ந்து, ஏற்பட்ட பழுது காரணமாக, அதன் வழியாக மின் சப்ளை நிறுத்தப்பட்டு, மீண்டும் மின்கம்பி வழியாக மின் சப்ளை செய்து வருகின்றனர். இதனால், மீண்டும் மின் தடை பாதிப்புகள் அதிகரிப்பதால் பழங்குடி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பழங்குடி மக்கள் கூறுகையில், 'வனவிலங்குகள் வாழ்விடமான முதுமலையில், வனத்துறை அலுவலகம், வீடுகள் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு, தடையின்றி மின்சப்ளை வழங்க, கேபிள் வயர் அமைக்கப்பட்டது. அதன் திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் உள்ளதால், மீண்டும் பழைய நிலையே தொடர்கிறது. உயர் அதிகாரிகள் திட்ட பணிகளை, முழுமையாக ஆய்வு செய்து, திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'மின் கேபிள் வயரை சீரமைத்து, சீராக மின்சப்ளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். திட்டத்தை மேற்கொண்ட நிறுவனத்திற்கு, பணிக்கான தொகை இதுவரை வழங்கவில்லை. அவர்கள் முழுமை படுத்தினால் மட்டுமே தொகை வழங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ