பாரம்பரிய உணவை மறந்த குழந்தைகள் துரித உணவுக்கு அடிமையாகும் அவலம்; விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவலை
குன்னுார்; குன்னுார் சோகத்தொரை கிராமத்தில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஊர்தலைவர் பசுபதி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் பேசுகையில்,''மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள், கிரிக்கெட், சின்னத்திரை தொடர்கள், போன்றவற்றின் மூலமாக விளம்பரங்கள் செய்து, பொருள் வாங்கி குவிக்கும் நுகர்வு கலாசாரம் அதிகரித்துள்ளது. தற்போது, ஆன்லைன் வர்த்தகம் போன்ற வணிக சூழலில் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில், 2019ல் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.சீனா போன்ற நாடுகளின் துரித உணவு சுவைக்கு, குழந்தைகள் அடிமையாகி, பாரம்பரிய உணவு கலாசாரத்தை மறந்து விட்டனர். துரித உணவுகளால் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.இந்நிலை நீடித்தால், பொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல்நலம், மன நலம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டு, வருங்கால சந்ததிகள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்,'' என்றார். ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார். கிராம மக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.