உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / களிமண்ணால் கலைநய பொருட்கள் -கிராமத்து பெண்ணின் முயற்சி

களிமண்ணால் கலைநய பொருட்கள் -கிராமத்து பெண்ணின் முயற்சி

பந்தலூர்: பந்தலூர் அருகே எருமாடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர், வீட்டின் அருகே கிடைக்கும் களிமண்ணை கொண்டு அழகிய உருவங்கள் மற்றும் கலைநயம் மிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார். பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. பி.காம்., படிப்பை நிறைவு செய்த இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பின்னர் அந்த வேலையிலிருந்து விலகி, வீட்டிலிருந்து, ஆன்லைன் வாயிலாக கிராமங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அழகிய வண்ணமயமான, கலைப் பொருட்கள் தயாரிப்பை கற்றுக்கொண்டார். சுயமாக கற்றுக் கொண்ட இவர், விநாயகர் சதுர்த்தி காலத்தில் களிமண்ணால் விநாயகர் செய்து, அதில் பல்வேறு மரங்களின் விதைகளை வைத்து, அந்த விநாயகர் சிலைகளை நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் வைத்து வணங்கச் செய்து, அதனை சிறிய நீரோடைகளை கரைக்கச் செய்கிறார். இதன் மூலம் ஆறுகள் நீரோடை ஓரங்களில் மரங்கள் மற்றும் செடிகள் வளரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். தற்போது இவர் களிமண்ணை கொண்டு, கேரளாவின் பாரம்பரிய தெய்வமான தெய்யம் வடிவ சிலைகள் உருவாக்குதல், நார் பொருட்கள் மற்றும் காடுகளில் கிடைக்கும் மஞ்சாடி குருஎனப்படும் சிவப்பு நிற விதைகள் போன்றவற்றை கொண்டு கலைநயமிக்க பொருட் களை வடிவமைத்து வருகிறார். சங்கீதா கூறுகையில், தற்போது எந்த பொருள் எடுத்தாலும் அதில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உயிர்களுக்கும், இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தடுக்கும் வகையில் கிராமப்புறங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கலைநயமிக்க பொருட்கள், வனங்களை உற்பத்தி செய்யும் விதைகள் அடங்கிய பொம்மைகள், நெல் மற்றும் விதைகள் அடங்கிய காதணிகள் போன்றவற்றை செய்யலாம். இதன் மூலம் இயற்கைக்கும், உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. மகளிர் குழுக்களுக்கு இது குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு, கடிதம் அனுப்பியுள்ளேன். அனுமதி கிடைத்தால் கிராமப்புற பெண்களுக்கும் இயற்கையுடன் கூடிய கலைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ