உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகளிர் குழுக்களுக்கு கடன் பெற்று தருவதில் கமிஷன்? விசாரணை நடத்த மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு

மகளிர் குழுக்களுக்கு கடன் பெற்று தருவதில் கமிஷன்? விசாரணை நடத்த மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு

பந்தலுார்; பந்தலுார் பகுதியில் மகளிர் குழுக்களுக்கு கடன் வாங்கி தருவதில், சில தொண்டு நிறுவனங்கள் விதிகளை மீறி 'கமிஷன்' பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. பந்தலுார் பஜாரில், இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சமீப காலமாக மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இரண்டு தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டு, இவர்களின் பரிந்துரையுடன் செல்லும் குழுக்களுக்கு மட்டும்,50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை பெற்று தருவதற்கு ஒவ்வொரு நபரிடமும் தலா, 3,000 முதல் 5,000 ரூபாய் வரை கமிஷனாக தொண்டு நிறுவன பணியாளர்கள் பெற்று கொள்கின்றனர். அத்துடன் கடன் வாங்கும் ஒவ்வொரு நபரின் பெயரிலும், தலா, 5-,000 ரூபாய் இன்சூரன்ஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சிலருக்கு கமிஷன் தனியாக கிடைக்கிறது. இதனால், பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்த புகாரை தொடர்ந்து, மா.கம்யூ., ஏரியா செயலாளர் ரமேஷ் தலைமையில் உள்ளூர் மக்கள், வங்கி மேலாளருடன் கேட்டபோது, மகளிர் குழுவினரை ஏமாற்றியது உண்மை என்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, மாநில முதல்வர்; மாவட்ட கலெகடருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'கமிஷனுக்காக துவக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை வேண்டும்.'கடன் பெற்றவர்களிடம் பெறப்பட்ட கமிஷன்; இன்சூரன்ஸ் தொகையை திரும்ப வழங்க வேண்டும்; இது போன்ற முறைகேடுகள் குறித்து, வங்கியிலும் விசாரணை நடத்த வேண்டும்; தொண்டு நிறுவன நிர்வாகிகள் வங்கியில் இரவு, 9:00 மணி வரை கடன் வழங்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது குறித்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது. வங்கி மேலாளர் காந்தி கூறுகையில், ''இப்பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்துக்கும், வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தொண்டு நிறுவனத்தினர், மகளிர் குழுக்களை ஏற்படுத்தி, தொழில் முனைவோர்களாக மாற்றம் செய்யும் வகையில் கடன் பெற்று தருகின்றனர். ''இந்நிலையில், கடன் வழங்கும் திட்டத்தை முறையாக மேற்கொள்ளும் வங்கி மீது எதற்காக இது போன்ற புகார்களை முன் வைக்கின்றனர் என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை