உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை வாழ்விட பகுதியில் தார் சாலை அமைத்து விதிகளை மீறி பணி! நிலச்சரிவு அச்சத்தால் பழங்குடியினர் முதல்வருக்கு மனு

யானை வாழ்விட பகுதியில் தார் சாலை அமைத்து விதிகளை மீறி பணி! நிலச்சரிவு அச்சத்தால் பழங்குடியினர் முதல்வருக்கு மனு

குன்னுார்; கேரளா வயநாடு நிலச்சரிவு போன்று, குன்னுாரிலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக, அச்சம் தெரிவித்து பழங்குடியினர் மாநில முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், வனங்கள் சூழ்ந்த குன்னுார் மலை பகுதிகளில் சமீப காலமாக இயற்கை வளங்கள் அழித்து, பிரம்மாண்ட கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. பொக்லைன் பயன்பாடு; பாறை உடைப்பதற்கு கோர்ட் தடை விதித்தும் விதிமீறல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.

விதிகளை மீறிய பணி

இந்நிலையில், கடந்த, 2023ம் ஆண்டு மே மாதம் குரும்பாடி புதுக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையின் மேற்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் பொக்லைன் பயன்படுத்தி, விதிகளை மீறி மலையை குடைந்து, பட்டியலின மரங்கள் வெட்டி சாய்த்து, மண் சாலை அமைக்கப்பட்டது. மக்கள் புகார் அளித்தும், இதனை கண்டு கொள்ளாமல், விதிமீறி பொக்லைன் பயன்படுத்தி இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டன. இதனை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார்; கிராம நிர்வாக உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்தது. இதே பகுதியில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஐகோர்ட் உத்தரவின் பேரில் யானை வழித்தடம் பகுதியில் இருந்த குரும்பாடி ரிசார்ட் 'சீல்' வைக்கப்பட்டது.

முதல்வருக்கு பழங்குடியினர் மனு

இந்நிலையில், குரும்பாடி சாலையின் மேற்பகுதியில் மலையை கரைக்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது. இதனால், மலையின் கீழ் பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் அச்சமடைந்து, மாநில முதல்வர்; மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில்,'கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில், கடந்த ஆண்டு நடந்த பேரழிவுபோன்று, இங்கு நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பணிக்கு தடை விதிக்க வேண்டும்,' என, வலியுறுத்தி இருந்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், கடந்த சில நாட்களாக, நிலச்சரிவு அபாய பகுதியில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

நிலச்சரிவு ஏற்படும் அபாயம்?

இப்பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் கூறுகையில்,'' நாங்கள் வாழ்ந்து வரும் கிராமத்தின் மேல் பகுதியில் இத்தகைய விதிமீறிய பணிகள் நடக்கிறது. இது குறித்து, மாநில முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு ஏற்கனவே மனு அனுப்பியும் இதுவரை தடை விதிக்கவில்லை. தற்பாது, சாலைபோடும் பணி நடக்கிறது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படுவதாக கூறப்படுகிறது. மலை மீது கட்டுமானங்கள் வந்தால், நிலச்சரிவு ஏற்படும் பட்சத்தில், பழங்குடி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.சுற்றுச்சூழல் ஆர்வலர் மனோகரன் கூறுகையில்,'' நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்ட குரும்பாடியில், அரசியல் பலத்தை பயன்படுத்தி விதிமீறல்கள் நடக்கின்றன. வி.ஏ.ஓ., முதல் அதிகாரிகள் வரை உள்ள வருவாய் துறையினர் இதனை அறிந்தும், அறியாமல் உள்ளனர். அங்கு பல விதிமுறை மீறல்கள் நடந்தும், சில அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு அடி பணிந்து அதிகாரிகள் செல்வதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில்,''குரும்பாடி பகுதியில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

அனுமதி பெறாமல் தார் சாலை...!

பர்லியார் ஊராட்சி தலைவர் சுசீலா கூறுகையில்,''பழங்குடியின மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பலமுறை தெரிவித்தும், அப்பகுதியில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அப்பகுதியில், பஞ்சாயத்தில் அனுமதி பெறாமல் தார் சாலை அமைக்கப்படுகிறது. இதனை ஆய்வு செய்ய வலியுறுத்தியும் ஒரு அதிகாரி கூட இதுவரை இப்பகுதிக்கு வரவில்லை. இதனால், மாவட்ட நிர்வாகம்; மாநில முதல்வருக்கு தகவல் அனுப்ப உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை