மேலும் செய்திகள்
மழை, வெப்பத்தால் சேதம் காய்கறிகள் விலை உயர்வு
09-May-2025
மேட்டுப்பாளையம்; நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழையால் மேட்டுப்பாளையம் மொத்த மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்து விலை உயர்ந்தது.மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. காய்கறி மார்க்கெட்டிற்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரட், மூட்டை கோஸ், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் வருகின்றன. இவை கேரளாவுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பருவமழை வெளுத்து வாங்குகிறது. அங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்துள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:- தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் காய்கறிகள் வரத்து 50 சதவீதம் குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் நேற்றைய தினம் கேரட் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை ஆனது. இதற்கு முன் ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.80 வரையும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.55 வரையும், விற்பனை ஆனது. சவ் சவ் ரூ.10 முதல் ரூ.20 வரையும் விற்பனையானது. வரத்து குறைவால் 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் விலை மேலும் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மார்க்கெட்டிற்கு தற்போது வரத்து குறைந்துள்ளதால், கேரள வியாபாரிகள் காய்கறிகள் வாங்க வரவில்லை. ஏனென்றால் அங்கும் பலத்த மழை பெய்கிறது. கேரள வியாபாரிகள் வராவிட்டாலும் தற்போது எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் காய்கறி வரத்து அதிகரிக்கும் போது கேரள வியாபாரிகள் வரவில்லை என்றால் காய்கறிகள் தேக்கம் அடையும். அப்போது நஷ்டம் ஏற்படும் என்றனர்.---
09-May-2025