உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இன்று முதல் பசுந்தேயிலை வினியோகம் நிறுத்தம்; கூட்டுறவு தொழிற்சாலை அங்கத்தினர்கள் முடிவு

இன்று முதல் பசுந்தேயிலை வினியோகம் நிறுத்தம்; கூட்டுறவு தொழிற்சாலை அங்கத்தினர்கள் முடிவு

குன்னுார்: தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை வழங்காத, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் பிரச்னைக்கு தீர்வு காணாததால், இன்று முதல் தேயிலை வினியோகம் செய்வதை விவசாயிகள் நிறுத்த உள்ளனர்.குன்னுாரில் உள்ள 'இன்கோ சர்வ்' தலைமையில், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்படுகிறது. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் ஏலத்தின் அடிப்படையில், தேயிலை வழங்கும் விவசாயிகளுக்கு, பசுந்தேயிலைக்கான மாதாந்திர விலையை தேயிலை வாரியம் நிர்ணயம் செய்கிறது.'இந்த விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அறிவித்த போதும், பல தொழிற்சாலைகளில் உரிய விலை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறது.

குந்தாவில் எட்டு தொழிற்சாலைகள்

இதில், குந்தாவில் உள்ள, 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அக்., மாத நிர்ணய விலையான கிலோவுக்க, 24.49 ரூபாய் வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. பிற கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் இது போன்ற குளறுபடிகள் நடந்துள்ளன. இதனை வழங்க, கூட்டுறவு தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பு குழுவின் கோரிக்கையை ஏற்றனர். தொழில்துறை அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகள், உரிய விலையை வழங்க 'இன்கோ சர்வ்' தொழிற்சாலைகளுக்கு உத்தரவிட்டும், பலதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை; இதனால், கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்குவது நிறுத்த முடிவு செய்தனர்.இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சுவாமிநாதன், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மை செயலர் அதுல்ஆனந்த், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ் இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் வினீத் உள்ளிட்டோர் அடங்கிய, கூட்டுறவு கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் மீண்டும் ஊட்டியில் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை முடிவேதும் எட்டப்படவில்லை.இது குறித்து குந்தா மேற்குநாடு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறுகையில், ''கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அங்கத்தினர்களின் கூட்ட முடிவின்படி, 'இன்கோசர்வ்' நிர்வாக மெத்தன போக்கிற்கு வருத்தம் தெரிவிப்பதுடன், பசுந்தேயிலைக்கான மாதாந்திர விலையை கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு அளிக்க, இன்கோசர்வ் உத்தரவாதம் அளிக்கும் வரையில், இன்று (23ம் தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வினியோகம் செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டு அங்கத்தினர்களுக்கு துண்டுபிரசுங்கள் வழங்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை