நீலகிரியில் கூட்டுறவு வார விழா பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், 71வது கூட்டுறவு வார விழா ஒரு வாரம் நடக்கிறது. நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த ஆண்டிற்கான, 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தமிழகத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு என்ற கருப்பொருளை கொண்டு இன்று, 14ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை ஒரு வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இவ்விழாவின் துவக்க நிகழ்ச்சியாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய வைகளில், கூட்டுறவு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.மேலும், பல்வேறு பள்ளிகளில் மரம் நடு விழாவும் நடத்தப்பட உள்ளது. 15ம் தேதி நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க அரங்கில் கருத்தரங்கம் நடக்கிறது. 16ம் தேதி அரவேணு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கோழிக்கரை பழங்குடியினர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடக்கிறது . இதில், மருத்துவர்கள் பங்கேற்று பழங்குடியின மக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க உள்ளனர். 17ம் தேதி ஊட்டி அருகே அப்புக்கோடு மகளிர் பால் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடக்கிறது.அதேபோல், 18ம் தேதி எருமாடு கப்பாலாபணியர் நல நில குடியேற்ற பண்ணை சங்கத்தின் சார்பில் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடக்கிறது. 19ம் தேதி ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கூட்டுறவு வார விழா சிறப்பாக நடக்க உள்ளது. இதில், பல்வேறு சங்கங்களுக்கும் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது, 20ம் தேதி கோத்தகிரியில் கூட்டுறவு பொருட்கள் விற்பனை மேளா நடக்கிறது. இவ்வாறு, தயாளன் கூறினார்.