16ல் இருந்து பசுந்தேயிலை வழங்குவதை நிறுத்த முடிவு; எட்டு கூட்டுறவு தொழிற்சாலை அங்கத்தினர்கள் தீர்மானம்
குன்னுார்; தேயிலை மாதாந்திர விலையை குறைத்து வழங்கியதற்கு, அதிகாரிகள் தீர்வு காணாததால் வரும், 16ல் இருந்து கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வினியோகம் செய்வதை நிறுத்த விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கும் விவசாயிகளுக்கு, உற்பத்தி செய்யப்படும், தேயிலை துாள் ஏலத்தின் அடிப்படையில், பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலையை தேயிலை வாரியம் நிர்ணயம் செய்கிறது. இந்திலையில், குந்தாவில் உள்ள, 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அக்., மாத விலை வழங்கியதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.குந்தா மேற்குநாடு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறியதாவது: குந்தா பகுதிகளில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், கடந்த அக்., மாத பசுந்தேயிலை விலையில் பாரபட்சம் காட்டி குறைவான தொகை வழங்கப்பட்டதை தொடர்ந்து, 6ம் தேதியில் இருந்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஊட்டியில் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அதிகாரிகள் தீர்வு காணாததால், 8 ஊர் கூட்டுறவு தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் கூட்டம், 4 ஊர் தலைவர்கள் முன்னிலையில் நடந்தது. அதில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு, 16ல் இருந்து பசுந்தேயிலை வழங்குவது நிறுத்துவது ; கோரிக்கை நிறைவேறாத நிலையில் 'இன்கோ சர்வ்' முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது; குழு தேர்ந்தெடுத்து தொழிற்சாலை நிர்வாகத்தை முறைப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன,'' என்றார்.