நகராட்சி மார்க்கெட் வியாபாரிகளை எம்.பி., சந்திக்காததால் அதிருப்தி
குன்னுார்; குன்னுார் மார்க்கெட்டில் தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டவுடன் எம்.பி., சென்றதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர்.குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில் கடந்த, 26ல் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், 23 கடைகள் எரிந்தன. இச்சம்பவம் தொடர்பாக, கவலை அடைந்துள்ள வியாபாரிகள், கடைகளை கட்டி தரவும், இழப்பீடு பெற்று தரவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஊட்டியில் முகாமிட்டுள்ள, நீலகிரி எம்.பி., ராஜா, தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட, நேற்று மதியம் வந்து தீயால் பாதிக்கப்பட்ட கடைகளை மட்டும் பார்வையிட்டு சில நிமிடங்களில், புறப்பட்டு சென்றார். இதனால், வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர்.வியாபாரிகள் கூறுகையில்,'எம்.பி.,யிடம் மீண்டும் கடைகள் அமைக்க மனுக்கள் வழங்க காத்திருந்த நிலையில் யாரையும் சந்திக்காமலும் சென்றது வருத்தத்தை அளிக்கிறது,' என்றனர்.