கல்வி அவசியம்! பெண் குழந்தைகளுக்கு பள்ளி கூடத்தில் எதிர்காலம்
பந்தலுார் ; 'பழங்குடியின பெற்றோர் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால், சமுதாயம் நலம் பெறும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் சைல்டு பண்ட் சார்பில், பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் பழங்குடியின மக்களிடையே விழிப்புணர்வு தெரு நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பந்தலுார் அருகே கூவமூலா பழங்குடியின கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் விஜயா வரவேற்றார். திட்ட மேலாளர் அபிலாஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:அனைத்து தரப்பு மக்களிடையேயும் கல்வி என்பது வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால், பழங்குடியின மக்கள் மத்தியில் கல்வி கற்பதில் போதிய நாட்டம் இல்லாததால், அரசின் திட்டங்களை கேட்டு பெறுவதிலும், தங்கள் சமுதாயத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதிலும் பின்னோக்கி செல்லும் நிலை தொடர்கிறது. வேலைக்கு அனுப்புவது குற்றம்
இந்த நிலை மாற பழங்குடியின பெற்றோர் தங்கள் குழந்தைகளை, படிக்க வைக்க முன் வர வேண்டும். அதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அதனை பெறுவதில் ஏதேனும் இடர்பாடு இருந்தால் எங்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம். மேலும், குழந்தைகள் படிப்பதற்கு தேவையான உதவிகளும் செய்து தரப்படும். அதேபோல், சிறு வயது திருமணம், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது போன்றவையும் குற்ற செயல்களாகும். அதில், ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, தர்மபுரியை சேர்ந்த விடியல் கலைக்குழு சார்பில், நிர்வாகி ஆனந்தன் தலைமையில், 'பெண் குழந்தைகளின் கல்வி மட்டும் எதிர்காலத்தை சிறப்பாக்கும், குழந்தை தொழிலாளர்கள், சிறுவயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள்,' குறித்து ஒயிலாட்டம், கோலாட்டம், வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதால் ஏற்படும் பாதிப்புகளை தத்ரூபமாக நாடகம் மூலம் குழுவினர் வெளிப்படுத்தியது, பழங்குடியின பெற்றோரை பெரிதும் கவர்ந்தது. பழங்குடி பெற்றோர் கூறுகையில், 'இனிவரும் காலங்களில் தங்கள் குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்பவும், சிறுவயது திருமணங்களை தடுப்பதிலும் முனைப்பு காட்வோம். குறிப்பாக, பெண் குழந்தைகளை பள்ளி கூடத்துக்கு அனுப்புவோம்,' என்றனர். நல்ல பயன் கிடைக்கும்
நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில்,' கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வாழும் பழங்குடி பெற்றோர் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சிறுவயது திருமணத்தால், பல பெண்களின் எதிர்காலம் இருண்டு விடுகிறது. இந்த பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, 'பழங்குடியின பெண்களை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்,' என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும் என நம்புகிறோம்,' என்றனர்.நிகழ்ச்சியில், கிராம தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். இதே போல், கூடலுார் மற்றும் உப்பட்டி ஐ.டி.ஐ., கோழிக்கொல்லி பழங்குடியின கிராமம் ஆகிய பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. களப்பணியாளர் யோகேஸ்வரி நன்றி கூறினார்.