மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு சீல்
ஊட்டி: நீலகிரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், முதல் நிலை சரி பார்க்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து, அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மாநில சட்டசபை பொதுத்தேர்தலுக்காக, வாக்காளர் சிறப்பு திருத்த பணி நிறைவடைந்து, முதற்கட்ட வாக்காளர் பட்டியல் கடந்த, 19ம் தேதி வெளியிடப்பட்டது. விடுபட்ட வாக்காளர்களின் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் தற்போது நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து, கலெக்டர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னேற்பாடு பணி நடந்தது. அப்போது, தேவையான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதில், முதல் நிலை சரிபார்ப்பு பணி நிறைவடைந்ததை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், பாதுகாப்பாக கிடங்கில் வைக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது.