அவலாஞ்சி அணையின் அருகே அத்துமீறல்; பயணியருக்கு பாதுகாப்பு அவசியம்
ஊட்டி; ஊட்டி அவலாஞ்சி சூழல் சுற்றுலாவின் போது, அத்துமீறும் சுற்றுலா பயணிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீலகிரி வனக்கோட்டம் அவலாஞ்சி வன சரகத்தில் சூழல் சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா வருபவர்களை வனத்துறையினர் வாகனத்தில் சூழல் சுற்றுலா அழைத்து செல்கின்றனர். அவலாஞ்சி சூழல் சுற்றுலா பகுதிகளில் அணை, இயற்கை காட்சிகள் நிறைந்துள்ளது. இங்கு வரும் சில சுற்றுலா பயணியர் அணை கரையோர அபாயகரமான பகுதிகளுக்கு சென்று சாகசத்தில் ஈடுபடுவது போன்ற அத்துமீறலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. வனத்துறையினர் எச்சரித்தாலும் சில சுற்றுலா பயணியர் அத்துமீறலில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. அங்கு வரும் சுற்றுலா பயணியர் வழி முறைகளை அறியும் வகையில், ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.