உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவசாயிகளுக்கு வழங்க கூட்டுறவு நிறுவனத்தில் தயார் நிலையில் உரம்! காய்கறி தோட்டங்களை பராமரிக்கும் பணிகள் துரிதம்

விவசாயிகளுக்கு வழங்க கூட்டுறவு நிறுவனத்தில் தயார் நிலையில் உரம்! காய்கறி தோட்டங்களை பராமரிக்கும் பணிகள் துரிதம்

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 65 ஆயிரம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய, முதற்கட்டமாக, 2000 டன் உரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 65 ஆயிரம் விவசாயிகள் தேயிலை மற்றும் 25 ஆயிரம் விவசாயிகள் மலை காய்கறிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விவசாய நிலங்களை தயார் செய்யும் வகையிலான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. தேயிலை,மலை காய்கறி தோட்டங்களை பராமரிக்க விவசாயிகள் ஆயத்தமாகியுள்ளனர். சிறு விவசாயிகளுக்கு தேவையான, 'யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ்' உள்ளிட்ட உரங்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் வாயிலாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தவிர, தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுக்கு தேவைப்படும் உரத்தை அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் வாயிலாக பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. 19 கூட்டுறவு மையம் ஊட்டியில் உள்ள என்.சி.எம். எஸ்., கூட்டுறவு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மாவட்ட முழுவதும், 19 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. விவசாய பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. என்.சி.எம்.எஸ்., மேலாண்மை இயக்குனர் முத்துகுமார் கூறுகையில், ''மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், தேயிலை தோட்டங்களை பராமரிக்க நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, விவசாயிகளுக்கு, 10க்கும் மேற்பட்ட வகையான உரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 2000 டன் உரம் பெறப்பட்டு தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனத்தை அணுக வேண்டும்,'' என்றார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் தங்கள் சங்கத்தில் உர விற்பனை மேற்கொள்ள வேண்டும். ''புதிய பயிர் கடன் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைந்து பயிர் கடன் வழங்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை