விவசாயிகளுக்கு வழங்க உரங்கள் கையிருப்பு 2,400 மெட்ரிக் டன்; கூட்டுறவு நிறுவனத்தை அணுக அறிவுரை
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து வடகிழக்கு பருவ மழையும் பரவலாக பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து பகல் நேரங்களில் வெயில் தென்படுவதால் தேயிலை தோட்டங்களில் நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில், குன்னூர் இன்கோ சர்வ் (கூட்டுறவு இணையம்) கட்டுப்பாட்டில், 17 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை செயல்படுகிறது. சில பகுதிகளில் ஏற்கனவே உரமிட்டு பராமரிப்பு பணி மேற்கொண்டதால் கூட்டுறவு தொழிற்சாலைகளில் தினசரி சராசரியாக, 20 ஆயிரம் கிலோ முதல் 25 ஆயிரம் கிலோ வரை இலை கொள்முதல் செய்யப்படுகிறது. தேயிலை உற்பத்தியும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. மேலும் , மழை தொடர்வதால் உரத் தேவை அதிகரித்து தேயிலை தோட்டங்களை உரமிட்டு. பராமரிக்க விவசாயிகள் ஆயத்தமாகியுள்ளனர். 2,400 மெட்ரிக் டன் தேயிலை விவசாயிகள் தேயிலை தோட்டங்களுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் வாயிலாக தேயிலை விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். என , விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா தரமான உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, உர கட்டுப்பாட்டு துறை வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்ட முழுவதும் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அனைத்து கிளைகள் மற்றும் தனியார் உரக்கடைகளிலும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் யூரியா 1200 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 400 மெட்ரிக் டன், பொட்டாஷ் 800 மெட்ரிக் டன் என, மொத்தம், 2400 மெட்ரிக் டன் உரங்கள் பெறப்பட்டு தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.
விண்ணப்பங்கள் அளிக்கலாம் !
'மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு தொழிற்சாலைகள் வாயிலாக உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகத்தை அணுகி விண்ணப்பங்கள். அளிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.