வணிகர் சங்க விழாவில் விளையாட்டு போட்டி கயிறு இழுத்தல் போட்டியில் முதல் பரிசு ரூ.1.25 லட்சம்
பந்தலுார் : பந்தலுார் வணிகர் சங்கம் நடத்திய விளையாட்டு போட்டியில் நடந்த கயிறு இழுக்கும் போட்டியில், முதல் பரிசாக, 1.25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.பந்தலுார் வணிகர் சங்க இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட துணை தலைவர் ஆண்டனி வரவேற்றார். சங்க தலைவர் அஷ்ரப் தேசிய கொடியை ஏற்றினார். விநாயகா மருத்துவமனை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தொடர்ந்து, இசை நாற்காலி, லெமன் ஸ்பூன், சட்டி உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, தேசிய அளவில் புகழ் பெற்ற கேரள மாநில அணிகளின் கயிறு இழுத்தல் போட்டி இரவு நடந்தது. இதனை, நகர மன்ற தலைவர் சிவகாமி, கமிஷனர் முனியப்பன், வணிக சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் முகமது பரூக், மாநில துணை தலைவர் தாமஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதில், 130 கிலோ எடை பிரிவு கொண்ட வீரர்கள் பங்கேற்று கயிறு இழுத்தனர். மலப்புரத்தை சேர்ந்த 'மிடில் ஈஸ்ட்' அணியினர் முதல் இடத்தை பிடித்து, பரிசு கோப்பை மற்றும், 1.25 லட்சம் ரூபாய் பரிசு தொகை பெற்றனர். மஞ்சேரியை சேர்ந்த 'ரியல்' அணியினர் இரண்டாம் இடம்; கொண்டோட்டி 'எகெய்ன்' அணி, 3-ம் இடம்; 'பிளேக் கோப்ரா' அணி, 4-ம் இடம் பிடித்தனர். அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, இசை நிகழ்ச்சி நடந்தது. சங்க நிர்வாகிகள் குணசேகரன், அலியார், அப்துல் ரசாக், பாதுஷா, சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.