பந்தலுார் நுாலக வாசகர் வட்டத்திற்கு அரசு விருது
பந்தலுார்; பந்தலுார் நுாலகத்தின் வாசகர் வட்டத்திற்கு, அரசு கல்வித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. பந்தலுாரில் கடந்த, 50 ஆண்டுகளாக நுாலகம் செயல்பட்டு வருகிறது. நுாலக வாசகர் வட்டத்தின் சார்பில், மாணவர்களை வாசகர்களாக அதிக அளவில் சேர்த்தல், மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி அளித்தல், கண் சிகிச்சை முகாம் நடந்து வருகிறது. மேலும், போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து ஊக்குவித்தல், புத்தக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்ட, நுாலகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பந்தலுார் நுாலக வாசகர் வட்டம், சிறந்த வாசகர் வட்டமாக தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விருதினை வழங்கினார். பந்தலுார் நூலகர் அறிவழகன், வாசகர் வட்ட தலைவர் முத்துக்குமார், நிர்வாகி சிவசுப்ரமணியம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு, நுாலகர் வாசகர் வட்ட உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.