தேயிலை வரத்து அதிகரிப்பு: விற்பனை சரிவு; ரூ.26.35 கோடி மொத்த வருமானம்
குன்னுார்; குன்னுாரில் நடந்த தேயிலை ஏலங்களில், 26.35 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள் குன்னுார் ஏல மையம் மற்றும் 'டீசர்வ்' ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது. கடந்த அக்., மாதம் விலை உச்சத்தை தொட்டது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த விற்பனையும், விலையும் தொடர் சரிவை சந்தித்தது.குறிப்பாக, கடந்த, 7 ஏலங்களில் வாரந்தோறும் சராசரி விலையில், 4 முதல் 8 ரூபாய் வரை குறைந்து வருகிறது. குன்னுார் ஏல மையத்தில் கடந்த வெள்ளியன்று நிறைவு பெற்ற, 48வது ஏலத்தில், 26 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்ததில், 19.84 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த ஏலத்தை விட, 1.81 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. சராசரி விலை கிலோவுக்கு,124.78 ரூபாய் என இருந்தது; கிலோவிற்கு, 1.67 ரூபாய் வரை சரிந்தது. மொத்த வருமானம், 24.76 கோடி ரூபாய் கிடைத்தது. டீசர்வ் ஏலம்
நீலகிரியில் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் ஏலம் விடப்படும்'டீசர்வ்' மையத்தில் நடந்த, 48வது ஏலத்தில், '1.42 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 1.39 லட்சம் கிலோ,' என, 97.61 சதவீதம் விற்றது. சராசரி விலை, 114.66 ரூபாய் என இருந்தது. 1.59 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. ஒரே வாரத்தில், 70 ஆயிரம் கிலோ வரத்தும், 55 ஆயிரம் கிலோ விற்பனையும் குறைந்தது; கடந்த ஏலத்தை விட, 63 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் சரிந்தது. இரு ஏலங்களிலும் சேர்த்து, 26.35 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.