மேலும் செய்திகள்
பசுமை நீலகிரி விழிப்புணர்வு
09-Dec-2024
கோத்தகிரி, ; கோத்தகிரி சி.எஸ்.ஐ., மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், சுற்றுச்சூழல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.தலைமை ஆசிரியர் ஜெப்ரிபிரீத்தா தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் வக்கீல் உதயகுமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:காலநிலை மாற்றத்திற்கு, அமெரிக்கா, சீன உட்பட, 27 வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் பசுமை குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றுவது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாட்டில், சுற்றுச்சூழல் மாசு தடுக்கும் வகையில், காடுகளை உருவாக்கும் வகையில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப், 'காலநிலை மாற்றம் என்பது ஒரு போலி அறிவியல்,' என கூறி, நிதி வழங்க மறுத்துவிட்ட நிலையில், ஏனைய ஐரோப்பிய நாடுகளும் பின் வாங்குவது, உலகளாவிய காலநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சிக்கு, பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.காலநிலை மாற்றத்தால், சுனாமி போன்ற பெரிய பேரிடர்கள் மட்டுமல்ல, வைரஸ்கள், பாக்டீரியாக்கள் போன்றவை கூட, கடுமையான தொற்று நோய்களை பரப்பி, மனித குலத்தை அழிக்கும் எனவும் கூறியுள்ளது.உலகில் ஒவ்வொரு ஆண்டும், 400 மில்லியன் டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில், 80 சதவீதம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி குப்பையாக வீசி எறியப்படுபவை. பூமி மட்டுமல்லாமல், கடல் பரப்பிலும், 40 சதவீதம் இடத்தை பிளாஸ்டிக் ஆக்கிரமித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தேசிய பசுமைபடை திட்ட அலுவலர் சுப்ரமணி வரவேற்றார். ஆசிரியர் பிலோமினா நன்றி கூறினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
09-Dec-2024