சுற்றுலா பயணிகளை கவர பூங்கா தோட்டக்கலை பண்ணையில் தீவிர பணி
கூடலுார்:கூடலுார், பொன்னுார் அரசு தோட்டக்கலை பண்ணையில், சுற்றுலா பயணிகள் கவரும் வகையில், பூங்கா அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். கூடலுார், நாடுகாணி அருகே, பொன்னுார் பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தேயிலை, காபி, குறுமிளகு, கிராம்பு, பாக்கு, பட்டர் புரூட் நாற்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதியில் சுற்றுலா மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி, முதல் கட்டமாக அப்பகுதியில் பூங்கா அமைப்பதற்கான பணிகளை துவங்கி உள்ளனர். ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பூ செடிகளை நடவு செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நீர் தாவரங்களை வளர்க்கும் வகையில், பொக்லைன் உதவியுடன் சிறிய குளம் அமைக்கும் பணியும் மேற்கொண்டுள்ளனர். 'இப்பணிகள் முழுமை அடைந்தபின், இதனைக் காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்,'என, அதிகாரிகள் தெரிவித்தனர்.