ஆசிரியரை பலி வாங்கிய மண்சரிவு; அபாயநிலையில் இருந்த ஷெட் அகற்றம்
குன்னுார் : குன்னுாரில் மழையால் ஏற்பட்ட மண்சரிவில் மண்ணில் புதைந்த ஆசிரியை வீட்டின் அருகே இருந்த அபாய ஷெட் அகற்றப்பட்டது.குன்னுாரில் கடந்த, 2 நாட்களாக நள்ளிரவில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையில் அலைசேட் பகுதியில் வீட்டின் அருகே பயங்கர சப்தத்துடன் மண்சரிவு ஏற்பட்டது.அப்போது கதவை திறந்த தனியார் பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி,42, மீது மண் சரிந்தது. கணவரின் கண் முன்னே மனைவி புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உடல் நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.முன்னதாக, இப்பகுதியை நகராட்சி கமிஷனர் சசிகலா, தாசில்தார் கனி சுந்தரம் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அருகில் அபாய நிலையில் இருந்த தகர ஷெட் உடனடியாக அகற்றப்பட்டது.மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடை ஏற்படுத்தப்பட்டது. மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இறந்த ஆசிரியை குன்னுாரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த, 6 மாதங்களாக பணியாற்றியுள்ளார். இவருக்கு இறுதி மரியாதை செலுத்த பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் வருகை தந்து கண்ணீர் விட்டனர். எப்போதும் சிரித்த முகத்துடன் நேர்மறை எண்ணங்களை மாணவியரிடம் போதித்ததையும் , வாரந்தோறும், 6 நாட்களும் மாலை 6:00 மணி வரை பள்ளி மாணவியருக்காக பணியாற்றியதையும் நினைவு கூர்ந்தனர். முன்னதாக அரசு கொறடா ராமச்சந்திரன், 4 லட்சம் ரூபாய் அரசின் நிதி உதவியைஆசிரியிரின் குடும்பத்தாரரிடம் வழங்கினார்.