மரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தை
கூடலுார்; முதுமலை வனப்பகுதியில், மரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, தங்கள் வாகனம் மூலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். வனத்துக்குள், வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள், யானை, மான், காட்டெருமை, மயில் உள்ளிட்ட உயிரினங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.புலி, சிறுத்தை, கரடி போன்றவை அபூர்வமாகவே தென்படும். ஆனால், நடப்பு ஆண்டு, எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்ததால், தற்போது முதுமலையில் மிதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால், மற்ற வன உயிரினங்களுடன் புலி, சிறுத்தை, கரடி ஆகியவை அதிக அளவில் தென்பட துவங்கியுள்ளது. நேற்று முன்தினம், வனத்தில் வாகன சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் சிறுத்தை மரக்கிளைகளில் அமர்ந்து ஓய்வெடுத்ததை, ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துள்ளனர். இதனை, வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் 'போட்டோ' எடுத்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை வனப்பகுதியில் தற்போது புலி, சிறுத்தை, கரடி ஆகியவை, சுற்றுலா பயணிகளுக்கு அடிக்கடி தென்பட துவங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள், வனப்பகுதிக்குள் சவாரி செல்லும் போது, அமைதியாக பயணிப்பதன் மூலம் புலி, சிறுத்தைகளை, அதிகளவில் பார்க்க முடியும்,' என்றனர்.