பழைய வாகனங்களை அகற்றாமல் சாலை சீரமைப்பு; அதிருப்தியில் உள்ளூர் மக்கள்
குன்னுார் ; 'குன்னுாரில் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் இருந்த, டி.டி.கே., சாலை சீரமைப்பு பணிகளுக்கு முன்பு, பழைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார், 3வது வார்டில் உள்ள டி.டி.கே., சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், நகராட்சி சார்பில், 73 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இங்குள்ள கல்வெட்டுகள் சீரமைக்காமல் பணிகள் துவங்குவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பொக்லைன் வரவழைத்து, கல்வெட்டுகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டது. அதில், முழுமையாக மூடப்பட்டிருந்த ஆங்கிலேயர் காலத்து பழைய கல்வெட்டு கண்டுபிடித்து புதுப்பிக்கப்பட்டது.அதே நேரத்தில், குன்னுாரில் பல இடங்களிலும் இருந்த நகராட்சியின் பழைய வாகனங்கள், குப்பை கிடங்கு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், டி.டி.கே., சாலையில் உள்ள பழைய நகராட்சி வாகனங்கள் அப்புறப்படுத்தாமல் சாலை பணி நடக்கிறது.மக்கள் கூறுகையில், 'டி.டி.கே. சாலை அருகே வாகனங்கள் செல்ல கன்டோன்மென்ட் தடை விதித்த சாலைக்கு, நகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். சாலை பணிகளை துவங்கும்முன் முழுமையாக ஆய்வுகள் மேற்கொண்டு தரமாகபணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.