பஸ்சை பிடிக்க ஓடி சென்றவர் பள்ளத்தில் விழுந்து படுகாயம்
குன்னுார்: குன்னுாரில் ஓடும் பஸ்சில் ஏற முயன்றவர், திடீரென தவறி பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.குன்னுார் உலிக்கல் பகுதியை சேர்ந்தவர் சசி,57. இவர் நேற்று துாதுார்மட்டத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு செல்ல, குன்னுார் பஸ் ஸ்டாண்ட் வந்து காத்திருந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசல் இருந்த நிலையில், பணிமனையில் இருந்து வந்த துாதுார்மட்டம் அரசு பஸ்சில் பயணிகள் ஏற ஓடி சென்றனர். அப்போது இவரும் கைபையுடன் ஓடி சென்று ஏற முயன்ற போது அருகில் இருந்த மின்கம்ப பெட்டியில் மோதி, தவறி தீயணைப்பு துறை அலுவலக பள்ளத்தில் விழுந்தார். மூக்கு மற்றும் தலையில் காயமடைந்த இவரை, உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மக்கள் கூறுகையில்,'இந்த பகுதிகளில் சாலையோரங்களில் சில ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் சாலையோரம் முன்புறத்தில் நிறுத்தி விடுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது பணிமனையில் இருந்து காலியாக வரும் அரசு பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் ஓடிச் சென்று ஏறுகின்றனர். இதனால், பயணிகளுக்கு உயிர் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, இந்த பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க போலீசார் அறிவுறுத்த வேண்டும்,' என்றனர்.