பூங்கா நடைபாதையில் தடையான கடைகள் அகற்ற நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
ஊட்டி : 'தாவரவியல் பூங்கா அருகே உள்ள நடைபாதையில் தடையாக உள்ள பெட்டி கடைகளை வியாபாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சேரிங்கிராசிலிருந்து தாவரவியல் பூங்கா செல்ல சுற்றுலா பயணிருக்காக நடைப்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில வியாபாரிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்ததால் சுற்றுலா பயணியர் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், நடைபாதை வியாபாரிகளுக்காக கடைகளை கட்டி வாடகைக்கு கொடுத்துள்ளது. எனினும், நடைபாதையில் பயணிகள் நடக்க இடையூறாக உள்ள பெட்டி கடைகளை பல அகற்றாமல் உள்ளதால், வார இறுதி நாட்களில் பயணிகள் சாலைகளில் நடமாடி வருகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உளளது. அதில், சில சுற்றுலா பயணியர், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளது. தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,''நடைப்பாதையை ஆக்கிரமித்து, பயணிகள் நடமாட முடியாத அளவுக்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் உடனே தாங்களாகவே பொருட்களை அகற்ற வேண்டும்.தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.