கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு வாரம் திறன் பயிற்சி; தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ஊட்டி; 'கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுவதால் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் அறிக்கை:கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு,19 வகை தொழிலாளர் நல வாரியங்கள் செயல்படுகின்றன.அதில், உறுப்பினராக, 18 வயது முதல் 60 வயது வரை உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்டத்தை பெறுகின்றனர். நலத்திட்ட உதவிகள் பெறுபவர்கள், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்விநிதி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவி தொகை நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து அந்தந்த மாவட்டதில், 'மேசன், கார்பென்டர், கம்பிவளைவு,வேலை, தச்சு வேலை, மின் பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம், சலவைக் கல் ஒட்டுதல்,'உள்ளிட்ட, 9 தொழில் பிரிவுகளில் கீழ், 7 நாட்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.பயிற்சியில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு பயிற்சி சான்றிதழுடன் நாளொன்றுக்கு, 800 வீதம், 7 நாட்களுக்கு, 5,600 இழப்பீட்டு தொகை, உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளது.தகுதியானவர்கள் தங்களுடைய நலவாரிய அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் ஊட்டியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடைய வேண்டும். மேலும், விவரங்களுக்கு, 0423--2448524 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.