ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
ஊட்டி; ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை, மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்; மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில், பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. டாக்டர்கள் தினேஷ், குருமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். டாக்டர்கள் கூறுகையில்,'பணி இடத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். போராட்டம் காரணமாக, புறநோயாளிகள் பிரிவுக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர். அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் செயல்பட்டது.