தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு; பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு
கூடலுார்; மேல் கூடலுார் அருகே, மருத்துவமனை வளாகத்தில் தடுப்பு சுவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின் தீர்வு ஏற்பட்டது.மேல்கூடலுார் கோக்கால் 'ஒன்றரை சென்ட்' பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெய்த மழையின் போது, ஆறு வீடுகள் மற்றும் முதியோர் இல்ல கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. அங்குள்ள மக்கள் வீடுகளை காலி செய்து வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.அங்கு அரசு மருத்துவமனை புதிய கட்டடத்துக்காக மண் எடுக்கப்பட்டதால், குடியிருப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து மத்திய புவியியல் துறையினர் ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.அதன்பின், பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தை ஒட்டி, தடுப்பு சுவர் அமைப்பதற்காக மீண்டும் பணி துவங்கப்பட்டது. எந்த தகவலும் இன்றி, பணி துவங்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த மக்கள், பணிகளை தடுத்து நிறுத்தினார்.தகவல் அறிந்த, கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் முத்துமாரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அழகப்பன், உதவி பொறியாளர் வீரமணி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில், தடுப்பு சுவர் அமைப்பதற்காக, பொக்லைன் கொண்டு மண் அகற்றப்படுவதால், மீண்டும் விரிசல் ஏற்பட்டு வீடுகள் பாதிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, பணிகளை நிறுத்த வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில்,'இப்பகுதியில் அதிகரித்து வரும் மண் அரிப்பை தடுப்பதற்காக தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்கள் அச்சப்பட தேவையில்லை,' என்றனர். இதனை ஏற்று கொண்ட மக்கள் பணிகள் செய்ய அனுமதித்தனர்.