அரசு பஸ்களில் பொருத்தப்பட்ட டிஜிட்டல் போர்டுகளால்... பயணிகள் குழப்பம்! வெவ்வேறு ஊரின் பெயர்கள் டிஸ்பிளே ஆவதால் சிக்கல்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பல அரசு பஸ்களில் பொருத்தப்பட்ட 'டிஜிட்டல்' போர்டுகளில், முன்பகுதியில் ஒரு ஊரின் பெயரும், பின்பகுதியில் வேறு ஊரின் பெயரும், 'டிஸ்பிளே' ஆவதால் பயணிகள் குழப்பமடைகின்றனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு போக்குவரத்து கழக மண்டலத்தின் கீழ், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் ஆகிய பணிமனைகளில், 270 வழித்தடங்களில், 320 பஸ்கள் உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள்தோறும், 1.50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். 80 சதவீதம் பஸ்களில் டிஜிட்டல் போர்டு
மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து வகை மாடல் கொண்ட , 280 அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டு பொருத்தப்பட்டுள்ளது. பழைய மாடல் கொண்ட, 40 பஸ்களில் மட்டும் முன்பக்கம், பின்பக்கம் வழித்தட போர்டு வைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த, 10 ஆண்டுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்த பெரிய பஸ்கள், சிறிய பஸ்களில் மேற்கூரை பழுது உள்ளிட்ட பல்வேறு குறைப்பாடுகளால், 70க்கு மேற்பட்ட பஸ்கள், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டன. அந்த பஸ்களில் ஒரு பஸ்சிற்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் போர்டு பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இயக்கப்படும் பல பஸ்கள் டிஜிட்டல் போர்டில் தான் இயங்கி வருகிறது. உள்ளூர், வெளியூர் பயணியர் குழப்பம்
மேலும், இம்மாவட்டத்தை பொறுத்தவரை அந்தந்த கிளைகளில் பஸ்கள் பழுதானால், 'ஸ்பேர் 'பஸ் இல்லாததால், அவசர தேவைக்காக, பிற வழித்தடத்திற்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இது போன்ற சமயங்களில் டிஜிட்டல் போர்டை ஆப் செய்துவிட்டு, பலகையிலான போர்டை வைத்து இயக்குகின்றனர். சமீப காலமாக, மாவட்டங்களுக்குள் இயக்கப்படும் பல அரசு பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள 'டிஜிட்டல்' போர்டுகளின் முன்பகுதியில் ஒரு ஊரின் பெயரும்; பின்பகுதியில் வேறு ஊரின் பெயரும் இடம் பெறுகிறது. இது சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்களை குழப்பமடைய செய்கிறது. இதனால், அவசர நேரத்தில் பஸ்சில் ஏறுபவர்கள் அல்லது டிஜிட்டல்போர்டில் ஊரின் பெயரை படிக்க குழப்பம் அடைபவர்கள், பஸ்சில் ஏறுபவர்கள் டிக்கெட் எடுக்கும் போது பிரச்னையாகி வழியில் இறக்கி விடப்படுகின்றனர். அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் முரளி கூறுகையில்,''மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் 'டிஜிட்டல் போர்டுகளில்' ஏற்படும் குளறுபடிகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்ட பின் தான் வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுகிறது. பஸ் புறப்படுவதற்கு முன்பு இருபுறமும் உள்ள போர்டுகளில் செல்லுமிடத்தின் பெயர்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின் பஸ்சை இயக்க அறிவுறுத்தப்படுகிறது. எனினும், தற்போது பஸ்களில் உள்ள டிஸ்பிளேவில் நிலவும் சிறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.