தோகை விரித்தாடும் மயில்கள்: நீலகிரியில் அடைக்கலம்
குன்னூர்: குன்னுார் அருகே குடியிருப்பு பகுதிகளில் மயில்களின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் கடந்த கோவிட் காலத்தில் இரு மயில்கள் வந்தன. இந்த பகுதியில் தஞ்சமடைந்துள்ள இந்த மயில்கள், அங்கு கிடைக்கும் உணவுகளை தேடி செல்கிறது. இதேபோல குன்னூர் பிருந்தாவன், மோர்ஸ் கார்டன் பகுதிகளிலும் தற்போது மயில்கள் தஞ்சமடைந்துள்ளது. இது குறித்து நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சிவதாஸ் கூறுகையில், தேசிய பறவையாக உள்ள மயில், முருகனின் வாகனமாக உள்ளதால், புனித பறவையாகவும் மக்கள் மதிப்பு கொடுக்கின்றனர். குளிர் பிரதேசமாக உள்ள நீலகிரியில் முன்பு மயில்கள் பார்த்ததில்லை. சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளும் பறவைகளும் உணவுக்காக படை எடுப்பது அதிகரித்து வருகிறது. வனப்பகுதி சாலையோரங்களில் உணவுகளை வீசுவதால், எளிதாக உணவு கிடைப்பதை எண்ணி இவற்றிற்காக காத்திருக்கிறது. சமவெளிப் பகுதிகளில் ஆற்காடு உள்ளிட்ட இடங்களில், விவசாய பாதிப்பிற்காக மருந்து வைத்தனர். தற்போது ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் மயில்கள் உணவுக்காக தஞ்சம் அடைந்தன. பொள்ளாச்சி மற்றும் கேரள மாநிலத்தில் பல பகுதிகளிலும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உணவு வழங்குவதால் இவை உணவு தேடி நீலகிரியில் அடைக்கலம் ஆகியுள்ளன. பல இடங்களிலும் அலங்கார பொருட்களுக்காகவும், சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட இடங்களில் காவடி செய்வதற்கும் தோகைகள் எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். என்றார்.