நோ பார்க்கிங் பகுதியில் வாகனம் நிறுத்தினால் அபராதம்; கூடலுார் போலீசார் எச்சரிக்கை
கூடலுார்; கூடலுாரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், வாகனங்களை முறையாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூடலுாரில் மூன்று நாட்களுக்கு முன் இரவு, குழந்தையுடன் பைக்கில் சென்றவர், சாலையோரம் இருந்த பைக் மற்றும் பழ கடை மீது மோதாமல் இருக்க, பிரேக் போட்டு பைக்கை நிறுத்த முயன்றார். எதிர்பாராமல் கீழே விழுந்து, அருகே சென்று கொண்டிருந்த லாரியின் டயரில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில், வியாபாரி சங்க நிர்வாகிகள் இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடையில், விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை சிறிது நேரம் நடைபாதையில் வைத்து, விற்பனை செய்யும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, பொதுமக்கள் தரப்பில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அங்கு வந்த அதிகாரிகள், 'இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்தனர். இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.தொடர்ந்து, போலீசார் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, 24 மணி நேரத்துக்குள் அகற்ற வலியுறுத்தி, அவர்கள் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலையோரம் அப்போது, ஆக்கிரமிப்பு கடைகளை சாலையோர வியாபாரிகள் அகற்றினர்.நேற்று முன்தினம் காலை, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில், கூடலுார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபாகரன், எஸ்.ஐ., குகனேஸ்வரன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். ஒரு சிலர் வரைமுறை இன்றி இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனர். அவர்களை, போலீசார் எச்சரித்து, வாகனங்களை வரைமுறையின்றி நிறுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தினர்.போலீசாரை சந்தித்த, வியாபாரி சங்க தலைவர் அப்துல் ரசாக், போக்குவரத்தை சீரமைக்க போலீசார் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தார்.போலீசார் கூறுகையில்,'சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் வைத்தால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.போலீசார் நடவடிக்கைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.