பூமிக்குள் புதையும் வீடால் மக்கள் பீதி; புவியியல் துறை ஆய்வு அவசியம்
ஊட்டி,:ஊட்டி அருகே பசவக்கல் பகுதியில் வீடு பூமிக்குள் புதைந்து வருவதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு இதுவரை, 70 மரங்கள் விழுந்தது, 20 வீடுகள் சேதமானது. 280 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்தந்த பகுதியில் முகாமிட்டு பேரிடர் தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை தொடர்வதால் மீண்டும் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டதை அடுத்து, 'பலத்த காற்றுடன் மழை பெய்யும் சமயங்களில் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதற்கிடையே, ஊட்டி அருகே பசவக்கல் பகுதியில் பெய்த மழைக்கு, புதிய வீடு ஒன்றில் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன , கட்டடம் பூமிக்குள் புதைந்து வருகிறது. இதன் அருகிலும் சில பழமை வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் அபாய நிலையால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'புவியியல் துறையினர் உடனடியாக அங்கு ஆய்வு மேற்கொண்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.