உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறை பிடிப்பு போராட்டம் நடத்த கூடிய மக்கள்; நிறுத்தப்பட்ட அரசு பஸ் இயக்காததால் அதிருப்தி

சிறை பிடிப்பு போராட்டம் நடத்த கூடிய மக்கள்; நிறுத்தப்பட்ட அரசு பஸ் இயக்காததால் அதிருப்தி

குன்னுார்; குன்னுார் -அதிகரட்டி- ஊட்டி வழித்தடத்தில், நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரி, பஸ் சிறைபிடிப்பு போராட்டம் நடத்த வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.குன்னுார்- அதிகரட்டி- ஊட்டி வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சில், 'சின்ன கரும்பாலம், கரும்பாலம், சேலாஸ், கெந்தளா, சன்னிசைடு, கோடேரி, குன்னக்கொம்பை, மணியாபுரம், நெடிகாடு, முட்டிநாடு, பாலகொலா, தாம்பட்டி,' கிராம மக்கள் ஊட்டி மற்றும் குன்னுாருக்கு நேரடியாக சென்று வந்தனர். இந்த பஸ், மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள், காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் மகளிருக்கு பயனாக இருந்தது. சமீபத்தில், அதிகரட்டி கிராமத்திற்கு,'மகளிருக்கு விடியல் பயணம் வேண்டும்,' என, கோரிக்கை விடுக்கப்பட்டதால், இந்த பஸ் மாற்றப்பட்டு, அதிகரட்டி வரை மட்டும் இயக்கப்படுகிறது.

திடீர் போராட்டம் நடத்திய மக்கள்

இந்நிலையில், அதிகரட்டி - ஊட்டி வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க, நடவடிக்கை இல்லாததால், அதிருப்தி அடைந்ததால், கோடேரி, குன்னக் கொம்பை, மணியாபுரம், முட்டி நாடு, கெந்தளா சேலாஸ் கிரமங்களை சேர்ந்த மக்கள் நேற்று குன்னக்கொம்பை அருகே, 11:30 மணிக்கு பஸ்சை சிறை பிடிக்க வந்தனர். இதனால், போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த, ஊட்டி தமிழ்நாடு போக்குவரத்து கழக மேலாளர் ஜெகநாதன், தமிழ்நாடு ஆதி அருந்ததியர் சமூகப் பேரவை நிறுவன தலைவர் கைகாட்டி சுப்ரமணியம், அதிகரட்டி,12வது வார்டு கவுன்சிலர் மனோகரன் உட்பட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்று நாட்களில் தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.மக்கள் கூறுகையில், 'பல கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்சின் நேரம் மற்றும் துாரங்கள் மாற்றப்பட்டதால், பணிக்கு செல்வோர் கூடுதல் கட்டணங்கள் செலுத்தியும், காலதாமதமாகவும் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குன்னுார்- அதிகரட்டி- ஊட்டி வழியாக மீண்டும் பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ