உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் இரும்பு பாலம் சாலையோரம் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்! விலங்குகளுக்கு ஆபத்து: ஆற்று நீர் மாசுபடும் அபாயம்

கூடலுார் இரும்பு பாலம் சாலையோரம் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்! விலங்குகளுக்கு ஆபத்து: ஆற்று நீர் மாசுபடும் அபாயம்

கூடலுார்: கூடலுார் இரும்புபாலம் அருகே, கோழிக்கோடு சாலையோரம் வீசப்படும் 'பிளாஸ்டிக்' கழிவுகளால் ஆற்று நீர் மாசுபடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்யவும்; பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு துறையினர் அடிக்கடி கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.கூடலுார் பகுதியில், தமிழக -கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், வெளி மாநில சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும், முழுமையாக தடுக்க முடியவில்லை.

சுற்றுலா பயணிகளால் பாதிப்பு

இந்நிலையில், நாடுகாணி வழியாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான உணவை எடுத்து வந்து, கோழிக்கோடு சாலையோரங்களில் அமர்ந்து உட்கொண்ட பின், அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை சாலையோரம் வீசி செல்கின்றனர்.அதில், இரும்புபாலம் பகுதியில், பாண்டியார் -புன்னம்புழா ஆற்றை ஒட்டிய கோழிக்கோடு சாலையோரம், சுற்றுலா பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஆற்றின் குறுக்கே, குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை நீர் மாசடைய காரணமாக உள்ளன. மேலும், அப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகள், உணவு கழிவுகளுடன் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு பாதிப்படையும் ஆபத்தும் உள்ளது.

விழிப்புணர்வு பணி அவசியம்

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,' இந்த குறிப்பிட்ட பகுதி தமிழகம்- கேரள எல்லையேரத்தில் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வசதியாக அமர்ந்து, உணவு உட்கொள்ளும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. இதனால், கோடை சீசன்மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களிலும், இப்பகுதியில் பயணிகள்அமர்ந்து உணவு உட்கொண்டு, கழிவுகளை ஆற்றோரம் வீசி செல்கின்றனர். இதனை நகராட்சி ஊழியர்கள் சுத்திகரிப்பு செய்தாலும் தடுக்க முடியவில்லை. இதனால், இப்பகுதியில் அமர்ந்து உணவு உட்கொள்ள முடியாத அளவுக்கு தடுப்பு அமைக்க வேண்டும். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். இதை தவிர, மாநில எல்லையில், வனம் சூழந்த பகுதிகளில், 'பிளாஸ்டிக்' கழிவுகளை வீச கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.

தீவிர 'பிளாஸ்டிக்' சோதனை என்னாச்சு...?

மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும், சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' மற்றும் சிறிய குடிநீர் பாட்டில்கள் குறித்து சோதனை செய்ய, மாவட்ட நிர்வாகம் சார்பில், தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.அவர்கள் சுற்றுலா பயணிகள் மத்தியல் 'பிளாஸ்டிக்' தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வருகின்றனர். இந்த பணிகளில் சமீபகாலமாக ஏற்பட்ட தொய்வு காரணமாக, வனப்பகுதி; ஆற்றோரங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குவியல்கள் அதிகரித்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை