உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலையில் சிலம்பாட்டம் உறியடியுடன் பொங்கல் விழா

மலையில் சிலம்பாட்டம் உறியடியுடன் பொங்கல் விழா

பந்தலுார்: நீலகிரி மாவட்டம் முழுவதும் நகரம், கிராமம், பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.பந்தலுார் அருகே கையுன்னி பணியாளர் மறுவாழ்வு மைய வளாகத்தில், பழங்குடியின மக்கள் மற்றும் நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் (நாவா) சார்பில் பொங்கல் விழா நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயா வரவேற்றார். மேலாளர் அபிலாஷ் தலைமை வகித்தார். 'நாவா' செயலாளர் ஆல்வாஸ் பொங்கல் விழாவை துவக்கி வைத்து, பழங்குடியின மக்களுக்கு அரிசி மற்றும் புத்தாடைகள் வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார். தொடர்ந்து, பெண்கள் பொங்கல் பானைகளில் அரிசி போட்டு பொங்கல் வைத்தனர். பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.விழாவில், 'நாவா' பள்ளி முதல்வர் பூவிழி, பொறுப்பாளர் மனோகர், பண்டைய பழங்குடியினர் பேரவை செயலாளர் புஷ்பகுமார், 'சிக்கல் செல்' பிரிவு திட்ட மேலாளர் திருமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். திட்ட பணியாளர் நீலகண்டன் நன்றி கூறினார்.* கூவமூலா பழங்குடியின கிராமத்தில், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு; மகாத்மா காந்தி பொது சேவை மையம்; நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் இணைந்து பொங்கல் விழாவை நடத்தின. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார். காந்தி பொது சேவா மைய தலைவர் நவ்ஷாத், சமூக ஆர்வலர்கள் காளிமுத்து, இந்திரஜித், பழங்குடியின கிராம தலைவர் கேத்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் நன்றி கூறினார்.* பந்தலுாரில் செயல்படும் ஏகல் தையல் பயிற்சி நிலையத்தில், நேற்று காலை தையல் பயிற்சி மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். ஆசிரியை ராஜேஸ்வரி தலைமையில் மாணவிகள் இணைத்து, பொங்கல் வைத்ததுடன், சூரிய பகவானுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

குன்னுார்

குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் மாணவியர் சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. முதல்வர் அருட்சகோதரி ஷீலா துவக்கி வைத்தார். விழாவில், வண்ண கோலமிட்டு, குழுக்களாக மாணவியர், பேராசிரியர்கள் பொங்கல் வைத்து, பூஜையிட்டு, வழிபாடு செய்தனர். தொடர்ந்து, சிறந்த கோலம் மற்றும் பொங்கல் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக பாரம்பரிய கலாசாரமான சிலம்பாட்டத்தில் பேராசிரியை குணவதி தலைமையில் மாணவியர் அசத்தினர். உறியடி உற்சவத்தில், கண்களை கட்டி கொண்டு மகளிர் உறியடித்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. படுக நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.* குன்னுார் மேட்டுப்பாளையம் சாலை புதுக்காடு கிராமத்தில் குரும்பா பழங்குடியினர் உள்ளனர். போலீசார் சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து பொங்கல் வழிபாடுகள் நடந்தது. பழங்குடியினருக்கு, மியூசிக்கல் சேர் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. பழங்குடியினரின் நடனத்தில், போலீசாரும் பங்கேற்றனர்.

கூடலுார்

கூடலுார் காந்தி திடலில், நீலகிரி மாவட்ட தமிழ் சங்கத்தின், 24ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். சங்க தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். விழாவில், 'உலகம் போற்றும் தமிழன் பெருமை' என்ற தலைப்பில் நாஞ்சில் சம்பத் பேசினார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களிடையே ஏற்கனவே, நடத்தப்பட்ட கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் நடனம், பேச்சு, கவிதை வசிப்பது திறமையை வெளிப்படுத்தினர்.விழாவில், தமிழ் சங்க நிர்வாகிகள் மோகன்தாஸ், ஜெகநாதன், மணிவாசகம், மணிகண்டன், குறிஞ்சி இலக்கிய மன்ற தலைவர் ராமமூர்த்தி செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். வக்கீல் கணேசன் நன்றி கூறினார்.

கோத்தகிரி

கோத்தகிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். செயல் அலுவலர் முகமது இப்ராஹிம் மற்றும் கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் ஆகியோர் முன்னிலையில், பொங்கல் படைத்து, அனைவருக்கும் வழங்கப்பட்டது. பொங்கல் பாடலுடன், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ