கல்வி உபகரண பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கல்
பந்தலுார்: பந்தலுார் அருகே எருமாடு பகுதியில், கூடலுார் கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. பந்தலுார் அருகே கொளப்பள்ளி பகுதியில் செயல்படும், 'கூடு' அறக்கட்டளையின், 21ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, எருமாடு தனியார் மண்டபத்தில் நடந்தது. மையத்தின் ஆசிரியர் கஸ்துாரி வரவேற்றார். வயநாடு பகுதியை சேர்ந்த பழங்குடியின திருநங்கை பிரகர்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அறக்கட்டளை இயக்குனர் சன்னி தலைமை வகித்து பேசுகையில்,''பெங்களூருவை சேர்ந்த ரோட்டரி கிளப் உதவியுடன், 400 மாணவர்களுக்கு, கல்வி உதவி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள், சிறந்த ஆசிரியர்கள், சமூக சேவகர்கள் கவுரவிக்கப்பட்டனர்.