உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் பலத்த காற்றுடன் தொடரும் மழை; அவலாஞ்சியில் 29 செ.மீ.,: பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரியில் பலத்த காற்றுடன் தொடரும் மழை; அவலாஞ்சியில் 29 செ.மீ.,: பள்ளிகளுக்கு விடுமுறை

ஊட்டி; நீலகிரியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அவலாஞ்சியில், 29 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில், குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, அவலாஞ்சியில், 29 செ.மீ; அப்பர் பவானி, 16 செ.மீ; பந்தலுார், 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை முதல் ஊட்டியில் தொடர் மழை பெய்து வருவதால், குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குறைந்தளவிலான சுற்றுலா பயணிகள் மழை கோட்டு, வெம்மை ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். இந்நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், கேர்ன்ஹில் பகுதி, ஒன்பாவது மைல் சூட்டிங் மட்டம் பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தாலும், படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் ஆங்காங்கே விழுந்த மரங்களை, ஊட்டி தீயணைப்பு துறையினர், 'பவர்ஷா' உதவியுடன் அறுத்து போக்குவரத்தை சீர்படுத்தினர். மஞ்சன கொரை சாலை விரிவாக்க பணி நடக்கும் இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிரான காலநிலை நிலவியதால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ