தேயிலை தோட்டங்களில் மழைநீர் சேமிப்பு பணி; விவசாயிகளை ஊக்கப்படுத்த மானியம் அவசியம்
கூடலுார்; 'கூடலுார் பகுதியில், தேயிலை தோட்டங்களில் கால்வாய் அமைத்து மழைநீர் சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், நடப்பு ஆண்டு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. வனப்பகுதிகள் பசுமைக்கு மாறியதால் வனவிலங்குகளுக்கு உணவு. குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இந்நிலையில், மழைநீர் சேமிக்க வசதி இல்லாததால், மழைநீர் வீணாகி வருகிறது. இங்கு, சிறு விவசாயிகள் சிலர், தேயிலை தோட்டங்கள் இடையே சிறிய கால்வாய்கள் அமைத்து, மழைநீரை சேமித்து வருகின்றனர். இதனால், தேயிலை தோட்டங்களில் மண்ணரிப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன் நிலத்தடி நீரும் உயர்ந்து வருகிறது. விவாசாயி ராஜேந்திரன் கூறுகையில், ''பல ஆண்டுகளாக தேயிலை செடிகளுக்கு இடையே சிறிய அளவில் கால்வாய் அமைத்து மழைநீர் சேமித்து வருகிறேன். இதன் மூலம் மண்ணரிப்பு தடுக்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் உயர்கிறது. நல்ல மகசூல் கிடைக்கிறது. ''பருவமழைக்கும் முன், மழைநீர் சேமிப்பு கால்வாயை சீரமைக்க அரசு மானியம் உதவி வழங்கி ஊக்கப்படுத்தினால், சிறு விவசாயிகள் பலரும் இத்திட்டத்தில் ஆர்வம் காட்ட வாய்ப்புஉள்ளது,'' என்றார்.ஆய்வாளர்கள் கூறுகையில், 'கூடலுாரில் மே இறுதியில் துவங்கும் பருவமழை நவ., வரை பெய்து வருகிறது. எனினும், கோடைகாலத்தில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், எதிர்பார்த்த தேயிலை மகசூழும் கிடைப்பதில்லை. பல பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. நிலத்தடிநீரை உயர்த்த பருவமழை காலத்தில் மழை நீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 'அரசு, சிறு தேயிலை விவசாயிகளை ஊக்கப்படுத்தி மானிய உதவி வழங்கி, தேயிலை தோட்டங்களில், கால்வாய் அமைத்து மழைநீர் சேமிக்க நடவடிக்கை எடுத்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.